பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் தொண்டரடிப்பொடியாழ்வார். விப்ர நாராயணர் என்ற பெயருடைய இவர் விஷ்ணு பக்தர்களின் தூசியையும் தலையில் வைத்துக் கொண்டு பெருமாளை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்ததால் இவருக்கு தொண்டரடிப்பொடியாழ்வார் என்ற பெயர் உண்டாயிற்று.
இவரது அவதார உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருமலையிலிருந்து கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். தொண்டரடிப்பொடியாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறைக்கு எழுந்ததும் அவருக்கு மாலை,மரியாதை, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளினார்.
பின்னர் ஆலய வளாகத்தில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதிக்கு வந்ததும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக பெருமாள் திருமலைக்கும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவரது சந்நிதிக்கும் எழுந்தருளினார்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.