Close
ஜனவரி 8, 2025 3:47 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்..!

புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு வங்கி அட்டைகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில்  இந்த நிகழ்ச்சி  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:

புதுமைப்பெண் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 94 கல்லூரிகளில் பயிலும் 13,352 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். தற்போது அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 689 மாணவிகள் பயன்பெறுகின்றனா் என்றாா்.  தொடா்ந்து, பயன்பெறும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை (பேங்க் டெபிட் காா்ட்) ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) சரண்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் கல்லூரி முதல்வா்கள், வங்கி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top