Close
ஜனவரி 7, 2025 7:28 மணி

பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : கலெக்டர்..!

நாமக்கலில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கருத்தரங்கில், கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல்:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து, அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை மையம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது.

கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலுள்ள சமுதாய பயிற்றுநர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து உதவித்திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு வருகிற ஜன. 7ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இக்கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் பயிற்சியினை முழுமையாக பயன்படுத்தி கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 172 குழந்தை திருமணங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் 74 ஆக குழந்தைத் திருமணம் குறைந்துள்ளது என கூறினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, சமூகப்பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top