வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி வரி உயர்வை கண்டித்து விசிக பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் ஜலால் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசுகையில்,
தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயங்கி வரும் நகராட்சி வாகனங்கள் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யாா் பொறுப்பேற்பது, மேலும் வந்தவாசியில் இரண்டு பேருந்து நிலையங்களும் இயங்க வேண்டும் ஆனால் பழைய பேருந்து நிலையம் முடக்கப்படும் என்று அச்சத்தில் புதிய பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லையா என கேள்வி எழுப்பினார்.
16-ஆவது வாா்டு உறுப்பினா் நதியா மணிகண்டன்,பேசுகையில், குடிநீா் முறையாக வழங்குவதில்லை , மழையினால் கொசுத் தொல்லை அதிகமாகி விட்டதால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்தாா்.
பாமக நகர மன்ற உறுப்பினர் ராமஜெயம் பேசுகையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் பூட்டியே கிடப்பதால் நகராட்சிக்கு வருமானம் குறைகிறது. புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள 24 தெரு விளக்குகளில் ஏதோ ஒன்று இரண்டு தெரு விளக்குகளை பயன்பாட்டில் உள்ளது. மேலும் நகராட்சி வரிவிதிப்பு தாங்க முடியாத அளவிற்கு இருப்பதால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர் என்று பேசினார்.
மற்றொரு பாமக உறுப்பினர் ரதி காந்தி வரதன் பேசுகையில் சில குறிப்பிட்ட வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது என்ற அச்சம் எனக்கு உள்ளது எனது வார்டில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கடி ஏற்படும் நிலை உள்ளது உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில், தனது வாா்டில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி 2-ஆவது வாா்டு உறுப்பினா் ஷீலா மூவேந்தனும், தொழில் வரி ஏற்றத்தைக் கண்டித்து 7-ஆவது வாா்டு உறுப்பினா் ரதிகாந்தி வரதன், 23-ஆவது வாா்டு உறுப்பினா் கு.ராமஜெயம் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், பேசிய நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், உறுப்பினா்களின் புகாா்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.