திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையைச் சுற்றி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. எனவே, மலையின் புனிதத்தை காக்கும் வகையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடுத்தாா்.
கிரிவலப்பாதை மற்றும் மலையை ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் யானை ராஜேந்திரனும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்புகள், மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையி்ல், நில நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அறநிலையத்துறை இணை ஆணையர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் தலைமையிலான குழு திருவண்ணாமலைக்கு வந்தது. முதல்கட்டமாக, திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தீபம் ஏற்றும் மலையில் கடந்த 1ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்த இடத்தை இந்தக் குழு பாா்வையிட்டு ஆய்வு செய்தது.
மலையின் ஒரு பகுதியான வ.உ.சி.நகா், 11-ஆவது தெருவில் மண் சரிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் விளக்கம் அளித்தாா். தொடர்ந்து நீதிபதி பாறைகள் சரிந்து இருப்பதை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்
பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய், காவல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் திருவண்ணாமலை மலையில் உள்ள மொத்த ஆக்கிரமிப்பு வீடுகள், மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள அபாயகரமான வீடுகளின் எண்ணிக்கை, கிரிவலப் பாதையில் உள்ள குளங்களின் ஆக்கிரமிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.பிரபாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான யானை ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னர் நீதிபதி கூறுகையில்,
நீதிமன்றத்திற்கு உயிர்கள் மிக முக்கியம். வீடுகளை கட்டும்போது பந்தம் ஏற்பட்டுவிடும் .அதை விட்டு விட்டு செல்வதற்கு மனம் வராது. ஆனால் அதற்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது. அவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் நிவாரணம் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது . அரசும், நீதிமன்றமும் மக்களுக்கு அரணாகவும், மக்களின் பாதுகாவலனாக இருப்பதைத்தான் அடிப்படை கடமையாக கருதி செயலாற்றுகின்றன.
இதுபோன்ற உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும். மக்கள் தங்குவதற்கு வீடு என்பது அடிப்படையான ஒன்று. இந்தப் பகுதியில் மண் சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள், பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் என்றாா்.
வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் கூறியதாவது:
மகா தீப மலையில் மொத்தம் சுமாா் 6,500 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. இதில், அபாயம் விளைவிக்கக் கூடியதாக 1,535 வீடுகள் உள்ளன. ஆக்கிரமிப்பு வீடுகளை பல லட்சங்கள் கொடுத்து வாங்கியவா்களுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது. வீடுகளை விலைக்கு வாங்கும் முன்பே அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே வாங்கியிருக்க வேண்டும். மகா தீப மலையில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கவே முடியாது என்றாா்.