திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர்.
அதிகாலையில் பொதுமக்கள் நீராடி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் வெளி மாநிலம், பிற மாவட்ட பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவு வருகை தந்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் உள்ள சுவாமி சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு ஏராளமான பக்தர்கள் பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர்.
பக்தர்கள் வசதிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிற கோவில்கள், ஆலயங்களில் புத்தாண்டு வழிபாடு
ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன, மேலும் வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக்கவசம் அணிவித்தும், பூக்களால் மற்றும் துளசி பூமாலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள சோமாசிபாடி பாலசுப்பிரமணியர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே உள்ள கார் மில் தேவாலயத்தில் இரவு 12 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது போதகர் புத்தாண்டு வழிபாடு நடத்தினார்.
திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை சிறப்பு வழிபாட்டை நடத்தினார் திருக்கோவிலூர் சாலையில் உள்ள சாறும் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.