திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பாடகம், சீட்டம்பட்டு, சின்னக் கல்லந்தல், மன்சூராபாத் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காப்பு காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்துக்கான கால் தடயங்கள் இருப்பதாக கூறி கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து உதவி வன பாதுகாப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையில் நேற்று முன்தினம் 10 இடங்களில் காப்புக்காட்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஓரிடத்தில் சிறுத்தை நடமாடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் 10, பேர் கொண்ட வன குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து நேற்று ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு வனத்துறை கண்காணித்து வருவதாக மாவட்ட வன அலுவலர் யோகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட தேவிகாபுரம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே தேவிகாபுரம் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரங்களிலும் வன பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தனியாக சாலைகளில் நடமாட வேண்டாம், கால்நடைகளை பகல் நேரத்தில் வனப்பகுதிகளில் மேச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்கள் யாரேனும் பார்த்தால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்ணையும் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 9790150045 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
காப்பு காட்டு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் காப்பு காட்டு பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது