திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியதாவது;
புத்தகங்கள் இல்லாத அறை உயிர் இல்லாத உடலுக்கு சமமாகும். புத்தகங்கள் என்பது நாம் ஒலி வடிவமாக கருத்துக்களை பரிமாறிக் கொண்ட காலத்திற்குப் பிறகு கருத்துக்களை அடுத்த தலைமுறை கொண்டு செல்வதற்காக எழுத்துக்களாகவும் கல்வெட்டுகளில் கிடைத்திருக்கிறது.
ஓவியங்களாக இருந்தாலும் சரி வார்த்தைகளாக இருந்தாலும் சரி அது காலப்போக்கில் பல்வேறு வடிவங்களாக மாறியிருக்கின்றன. எழுத்துக்கள் கல்வெட்டுக்கள் பனை ஓலைகளிலும் துணிகளிலும் பிறகு காகிதங்களிலும் இப்பொழுது கணினியில் என பல்வேறு மாற்றங்கள் பெற்று இருந்தாலும் ஒரு தலைமுறை இல் இருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவை அனுபவத்தை கடத்துவது தான் ஒரு மொழியின் மிக சிறந்த பணியாக இருந்து வருகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள் திருக்குறளில் மட்டும் தான் உள்ளது. திருவண்ணாமலை நூலகம் பொன்விழா கண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் 400 வாசகர்கள் பயன்படுத்தும் இந் நூலகத்தில் தமிழகத்திலேயே சிறந்த நூலகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது.
திருவள்ளுவரின் 133 அடி உயரத்தில் திருவுருவச் சிலை கடந்த 2000 ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை வெள்ளி விழாவாக திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் மற்றும் பேச்சுப்போட்டி திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன், மாவட்ட நூலக அலுவலர் வள்ளி, வெற்றித் தமிழர் பேரவை தலைவர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நூலகர்கள் வாசகர்கள் கலந்து கொண்டனர்.