Close
ஜனவரி 4, 2025 2:43 காலை

ஒரு ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 374 பேர் கைது : குடிமைப்பொருள் போலீசார் அதிரடி..!

ரேஷன் அரிசி கடத்தல் -கோப்பு படம்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 374 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்.ஐ. ஆறுமுக நயினார் கூறியுள்ளதாவது:

சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஐ.ஜி. மற்றும் கோவை மண்டல எஸ்.பி., ஆகியோர் உத்தரவின்படி, ஈரோடு டி.எஸ்.பி., ராஜபாண்டியன் மேற்பார்வையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, எஸ்.ஐ.க்கள், சுதா, ஆறுமுகநயினார் தலைமையிலான குழுவினர் தீவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 2024ம் ஆண்டு, ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் தொடர்பாக, 364 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 374 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 89.5 டன் எடையுள்ள ரேஷன் அரிசி, ரேஷன் துவரம் பருப்பு 65 கிலோ, சர்க்கரை 15 கிலோ, பாமாயில் 15 லிட்டர், கோதுமை 40 கிலோ, காஸ் சிலிண்டர் 46 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 89 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட, 90 வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கோர்ட் மூலம்தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது, நாமக்கல் டி.ஆர்.ஓ., மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தம் ரூ. 26 லட்சத்து 71 ஆயிரத்து 727 அபராத வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள், 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் அரிசியை கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024ல், 7 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீதும், மாவு மில் உரிமையாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில், மாவட்ட எல்லைகளில் இரவு நேரங்களில் தொடர் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top