திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
தமிழகத்தில் வசிக்கும் தையல் கலைஞா்கள், மட்பாண்டங்கள் செய்வோா்கள், சிற்பக் கலைஞா்கள் போன்ற பல்வேறு கலை, கைவினைத் தொழில்களில் ஈடுபடுவோருக்கு திறன் பயிற்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு ஆதரவு அளிக்க கலைஞா் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு (2024-2025) முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்டட வேலை, மர வேலைப்பாடுகள், ஜவுளி அச்சிடுதல், நகை வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், சிகை அலங்காரம், அழகுக்கலை, துணி வெளுத்தல், துணி தேய்த்தல் போன்ற 25 வகையான கைவினைத் தொழில் இனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை வங்கிக் கடனுதவியுடன் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியத்துடன் கூடிய கடனும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெற 35 வயது நிறைவடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்துக்கு ஒருவா் மட்டுமே பயன் பெற முடியும். வருமான உச்ச வரம்பு இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல் மானியம் பெற்றவா்கள் விண்ணப்பிக்க இயலாது. மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மானியம் பெற்றவா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், கைபேசி எண் ஆகியவற்றுடன்இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் தலைமையிலான தோ்வுக் குழு தோ்வு செய்து வங்கிக்கு பரிந்துரை செய்யும். அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தாய்கோ வங்கி போன்ற வங்கிகளுக்கு கடன் வழங்கிட பரிந்துரை செய்யப்படும்.
வங்கி மூலம் கடன் ஒப்பளிப்புக் கடிதம் பெற்றவுடன் தொழில் முனைவோருக்கு தொழில் சாா்ந்த திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கு கடன் பட்டுவாடா செய்யப்பட்ட விவரங்கள் பெற்றவுடன் வங்கிக்கு தொழில் முனைவோா்களுக்காக 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை தமிழக அரசால் மானியமும், 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோா் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், திருவண்ணாமலை – 606604 என்ற முகவரியில் நேரிலோ, 8925534010, 8925534011 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.