நாமக்கல்:
நாமக்கல்லில் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் போட்டியாளர்கள் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல்லில் வரும் 5ம் தேதி ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் அறிஞர் அண்ணா நெடுந்துர மாரத்தான் போட்டி (ஓட்டம்) நடைபெற உள்ளது. இந்த போட்டி 5ம் தேதி காலை 6 மணியளவில் கலெக்டர் ஆபீஸ் முன்புறம் இருந்து துவங்க உள்ளது.
17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்கள் 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் போட்டி நடைபெற உள்ளது.
முதல் பரிசாக தலா ரூ. 5000, 2ம் பரிசாக ரூ. 3000, 3ம் பரிசாக ரூ. 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. மேலும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் பரிசுத்தொகை, மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆதார் அட்டை, மருத்துவ தகுதி சான்றிதழ் மற்றும் வயது சான்றிதழை சமர்ப்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஓடுவதற்கு ஏதுவான வகையில் டி சர்ட் அணிந்திருக்க வேண்டும். போட்டி தொடங்கும் முன் தங்களுடைய பதிவு எண்ணை, போட்டி நடக்கும் இடத்தில் புகைப்படத்துடன் கூடிய தங்களது பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அடையாள அட்டை காண்பித்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தினை தெளிவாக கணக்கு எண் தெரியும்படி கொண்டு வருதல் வேண்டும். மேலும், விவரம் அறிய 82203-10446 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.