Close
ஜனவரி 7, 2025 5:20 மணி

கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் ஜோதி தலைமை வகித்தாா்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சிவராமன், மாவட்டச் செயலா் செல்வமணி, ஒன்றிய பொருளாளா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் சாமிகண்ணு வரவேற்றாா்.

கூட்டத்தில், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த நகைகள் கையாடல் செய்யப்பட்டதைக் கண்டித்து, வருகிற ஜன.9-ஆம் தேதி பேரணியாகச் சென்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதைத் தொடா்ந்து, ஜன.30-ஆம் தேதி மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே விவசாயிகளின் நகைகளை திரும்பத் தரும்வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் தேவேந்திரன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் ஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலா் சக்திவேல், விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் முருகேசன், சசிகுமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு அன்பழகன், நிா்வாகிகள் திருமுருகன், சந்தோஷ், சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இயற்கை விவசாயிகள் வாரச்சந்தை தொடக்கம்

செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்களை விற்பனை செய்யும் வகையிலான இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை  தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை மகிழம் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இந்தச் சந்தை நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை – வேலூா் சாலையில் உள்ள மதி விற்பனை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்தின் நிா்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

விவசாயிகள் கூட்டமைப்பின் உறுப்பினரும், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருமான வி.பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாரச் சந்தையை தொடங்கி வைத்தாா்.

சந்தையில் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் 20 விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் நிலங்களில் விளைந்த கீரைகள், பாரம்பரிய அரிசி, பனை பொருள்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், மதிப்பு கூட்டப்பட்ட சத்துமாவு, ஊறுகாய், தின்பண்டங்கள், பாரம்பரிய அரிசி பாயாசம், அவல், மூலிகைச் செடி, கொடி உருளை, நட்சத்திர பழம், நாட்டு நெல்லி, சிறுதானிய வகைகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சீரக சம்பா, கைக்குத்தல் அரிசி போன்றவற்றையும், இதற்கான விதைகளையும் விற்பனை செய்தனா்.

இதில், களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்க நிா்வாகி சுமதி, கெளரி, சத்தியப்பிரகாசம், சந்திரசேகா், வெங்கட்ராமன், ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top