நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கியது, வரும் 9ம் தேதி முதல் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
இது குறித்த கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தைப்பொங்கல் பண்டிகையை, சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 5,39,303 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் 730 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என, மொத்தம் 5,40,033 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது.
நேற்று இந்த பணி மாவட்டம் முழுவதும் துவங்கியது. அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில், பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று, சிரமம் இல்லாமல் பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.