முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பாதுகாப்பு அம்சங்களை கைவிட்டு, அமைதியாக பக்தர்களோடு பக்தராக வந்து காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்தார்
சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாகவே ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்கள் என கட்டுக்கடங்காத கூட்டம் சாமி தரிசனம் மேற்கொண்டு வந்தது.
சில தினங்களுக்கு முன்பு ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்து இறையருள் பெற்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் தமிழக முதல்வரின் மனைவியான துர்கா ஸ்டாலின் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்களோடு பக்தராக எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார்.
திருக்கோவிலுக்கு வந்து அவரை கோயில் மணிக்காரர் அழைத்து சென்று சிறப்பு அர்ச்சனை மற்றும் சாமி தரிசனம் செய்து வைத்தார். தரிசனம் மேற்கொண்ட பின் அவருக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோயிலை வலம் வந்து கொடிமரம் அருகே இன்று சிறிது நேரம் வேண்டினார்ர்.
பொதுமக்களோடு பக்தராக வந்த அவரை அடையாளம் கண்டு சிலர் மட்டும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். அவரை புகைப்படம் எடுக்காத அளவிற்கு அவருடன் வந்த நபர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.