தீபத்திருவிழா நிறைவடைந்ததை ஒட்டி தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 13- ம் தேதி அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் 13 ஆம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபமானது ஜோதி வடிவில் 11 நாட்கள் அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலையில் மண் சரிவு ஏற்பட்ட காரணத்தால், மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை, ஆனாலும், மகாதீபம் ஏற்றும் திருப்பணியை செய்வோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மலை மீது சென்றனர்.
கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மகா தீபம் நிறைவு பெற்றவுடன் 24-ம் தேதி அன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீபக் கொப்பரை கோவில் ஊழியர்களால் மலையில் இருந்து இறக்கப்பட்டு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து கொப்பரைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் மலையே சிவனாக வணங்கி பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். இது போன்ற புனிதமான மலை மீது கோவில் ஊழியர்கள் பக்தர்கள் என மலையேறி தீபம் ஏற்றி வழிபடுவதால் இதற்கான பிராயசித்தம் செய்யும் வகையில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள கருவறையின் முன்பு கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு கோவில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது .
அதனை தொடர்ந்து தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மலை உச்சியில் சிறப்பு பூஜைகளும் விமர்சையாக வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. இதனை அடுத்து திருக்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட புனித கலச நீரானது அண்ணாமலையார் பாதத்தில் ஊற்றி சிறப்பு பிராயசித்த பரிகார நிவர்த்தி தோஷ பூஜைகள் நடைபெற்றது. பிராயசித்த பூஜையுடன் தீபத் திருவிழா முற்றிலும் நிறைவு பெற்றது.