Close
ஜனவரி 6, 2025 7:45 காலை

திருவண்ணாமலை பகுதியில் இருந்து ‘கோவிந்தா’ முழக்கத்துடன் திருப்பதி பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர் புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது பழமையான கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் சுற்று புற பகுதி கிராம மக்கள் ஒன்று கூடி மாலை அணிந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு அந்த கோவிலில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்படுபவர். அதேபோல் இந்த வருடமும்  மலமஞ்சனூர், தானிப்பாடி, சின்னையம்பேட்டை, ரெட்டியார் பாளையம், கீரனூர், வேப்பூர், செக்கடி, தேவரடியார் குப்பம், உடையார் குப்பம், விஜய்யப்பனூர், டி வேலூர், மோட்டூர், பக்கிரி பாளையம், விருப்பாச்சி, கொளமஞ்சனூர், கல்நாட்டூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச பெருமாள் கோயிலில் மாலை அணிந்து சிறப்பு பூஜைகள் செய்த பிறகு திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் ஏழுமலை, சேகர் மற்றும் ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமியர்களும் மஞ்சள் ஆடை அணிந்து தங்களது பொருட்களை சுமந்து கொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் திருப்பதிக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர்.

அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ,வேலூர், வழியாக திருப்பதி சென்று அடைகின்றனர். அங்கிருந்து 3800 படிக்கட்டுகள் கொண்ட நடை பாதை வழியாக அவர்கள் திருமலைக்குச் சென்று வருகிற பத்தாம் தேதி வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து 26 வருடங்களாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கூறுகையில்,இந்த உலகத்திற்கு குருவாக பாரத தேசம் திகழவும், நோய்கள் முழுமையாக ஒழியவும், உலக நன்மைக்காகவும், இந்த கிராம மக்களின் நன்மைக்காகவும், திருப்பதிக்கு ஒவ்வொரு வருடமும் பாதயாத்திரை மேற்கொள்கிறோம் . மேலும்  திருப்பதிக்கு யாத்திரையாக சென்று வேண்டினால் தான் எங்களுக்கெல்லாம் மன நிம்மதி கிடைக்கிறது.

இந்த கிராமமும் செழிப்படையும். மக்களுக்கும் எந்தவிதமான இன்னல்கள் இன்றியும் இருக்கிறோம். இதை கண்கூடாக பார்த்து வருகிறோம் என தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top