நாமக்கல்:
திமுக அரசிற்கு எதிராக, தமிழகத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ. சார்பில், மாவட்டத் தலைவர் பதவிக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்கான கருத்துக் கேட்பு பதிவு நடந்தது. இதில், தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் மண்டல் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட, 51 பேர் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை பதிவு செய்து, ஓட்டுப் பெட்டியில் அளித்தனர்.
இது குறித்து, பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
2024, செப்., 2ல், பிரதமர் நரேந்திர மோடி, தன்னை பா.ஜ., வில் உறுப்பினராக பதிவு செய்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் கிளைகள், மண்டலம் எனப்படும் நகர, ஒன்றிய அளவில் அமைப்பு தேர்தல்கள் நடந்தது. தற்போது, மாவட்டத் தலைவர் பதவிக்கான கருத்துக் கேட்பு நடக்கிறது.
பா.ஜ.,வில் தேசிய, மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கருத்துக்களை பதிவு செய்வதற்காக, மாநிலம் முழுவதும் நேற்று துவங்கி, 3 நாட்களுக்கு, மாவட்ட வாரியாக கருத்து கேட்பது நடக்கிறது. அவர்கள் கொடுக்கின்ற பட்டியல் அடிப்படையில், மாநில தலைமை பரிசீலித்து, மாவட்டத் தலைவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தமிழகத்தில் நடந்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்கக்கோரி, ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் நடத்தினாலும், அதற்கு தி.மு.க. அரசு தடை போடுகிறது. 2021-ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், கோர்ட்டில் வழக்காடுபவர்கள் வெட்டப்படுகிறார்கள், வக்கீல்கள் வெட்டப்படுகிறார்கள்.
கொலைகள், கொள்ளைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, போதை பொருள் கடத்தல் ஈடுபட்டவர்களோடு தொடர்புகள் வைத்துக்கொண்டுள்ளனர்.
தற்போது, புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலை வளாகத்திற்குள்ளையே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். தமிழக அரசு, தங்களை எதிர்க்கிற அரசியல் கட்சிகள் தனித்தனியாக சிதறி கிடப்பதால், தங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி, தவறுகளை மறைத்து நாடகமாடுகிறது.
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருப்பதால், தி.மு.க., ஆட்சியை அசைக்க முடியாது என்ற ஆணவப்போக்கோடு ஆட்சி நடத்தி வருகிறது. அதனால்தான், தமிழகம் முழுவதும் குற்றச்சம்பவங்கள், கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க., த.வெ.க., போன்ற கட்சிகள் தனித்தனியாக போராடுகின்றன.
பாலியல் வன்கொடுமைகளை ஆதரிக்கின்ற, தி.மு.க., ஆட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். தி.மு.க., அரசு தமிழகத்திற்கு தேவையில்லை என்ற ‘சிங்கிள் பாயிண்ட்’ அஜண்டாவோடு போராட்டக் களத்தை ஒருமுகப்படுத்தி நடத்த வேண்டும். அப்போதுதான் இந்த ஆட்சியின் கொடுமைகள் தடுக்கப்படும். தமிழக மக்களின் நன்மை கருதி, மக்கள்மீது அக்கறை இருக்குமானால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்.
அதற்கான முன்னெடுப்புகளை பா.ஜ., எடுக்க தயாராக உள்ளது. இதற்கு மூத்த அரசியல்வாதி ராமதாஸ் வழிகாட்ட வேண்டும். தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும் என்பதை இலக்காக வைத்து, எல்லோரையும் ஒன்றாக இணைத்து பெரிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.
அந்தப் போராட்டம் நடக்கும்போது, நாடு முழுவதும் கிளர்ந்தெழ வேண்டும். கோட்டையை தகர்த்தெறியும் வகையில் அந்த போராட்டம் அமையும். இவ்வாறு அவர் கூறினார். திரளான பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.