Close
ஜனவரி 9, 2025 4:01 காலை

பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகை..!

பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான கிராம மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

பள்ளிபாளையம் நகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் ஆபீசை 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராம பஞ்சாயத்துக்களை அருகில் உள்ள நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளுடன் இணைத்து அரசு உத்தரவு வெளியிடப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி, காடச்சநல்லூர், சமயசங்கிலி, அக்ரஹாரம், தட்டாங்குட்டை ஆகிய கிராமங்கள் பள்ளிபாளையம் நகராட்சியுடன் இøணைக்கப்படுகிறது. புதுப்பாளையம் கிராம பஞ்சாயத்து ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் லாரிகளில் வந்து மாவட்ட கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: எங்கள் பகுதி கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைப்பதால் எங்களது கிராமங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

மேலும், 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தொழில் வரி, சொத்து வரி, வீட்டு வரி போன்றவை பன்மடங்கு உயரும் அபாயம் உள்ளது. விவசாய கூலித்தொழிலை மட்டும் நம்பியுள்ள பொதுமக்களைக் கொண்ட, எங்களது பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதை எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்.

எங்களது கோரிக்கைகயை ஏற்று நகராட்சியுடன் இணைக்கும் அரசு உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top