நாமக்கல்:
தமிழக கவர்னரை எதிர்த்து, நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டார்.
தமிழக கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பிஎஸ்என்எஸ் ஆபீஸ் முன்பு கணடன ஆர்ப்பாட்டம் நடடைபெற்றது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார்.
கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக அரசு இயந்திரத்தை செயல்பட வைக்க முடியாமல் முட்டுக்கட்டையாக கவர்னர் செயல்படுகிறார். சட்டசபை தொடங்கும்போது, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும் வழக்கமாகும். கவர்னர் ரவி முதலில் தேசிய கீதத்தை பாடச் சொல்லி மரபுக்கு மாறாக செயல்பட்டுள்ளார்.
மிகச்சிறந்த முறையில் திமுக ஆட்சி நடைபெறுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சி எம்எல்ஏவைப் போல், வெளிநடப்பு செய்கிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், கவர்னர்கள் இதுபோன்று நடந்து கொள்வதில்லை. மாநில அரசு மக்களின் வளர்ச்சிக்காக தீட்டப்படும் அரசின் திட்டங்களை கவர்னர் புறக்கணித்து வருகிறார்.
அரசு திட்டங்களுக்கு கையொப்பம் செய்வதற்கு வேண்டும் என்றே காலதாமதம் செய்கிறார். சித்த மருத்துவ கல்லூரி பாளையங்கோட்டை, சென்னையில் உள்ளது. இவற்றை இணைத்து சித்த மருத்துவ பல்கலை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு செய்து, அதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்து ஒன்றரை ஆண்டு காலம் ஆனபோதிலும் இதுவரை அந்த கோப்பிற்கு கவர்னர் கையொப்பம் இடவில்லை.
பல பல்கலைக்கு வேந்தராக உள்ள கவர்னர், துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடியும்போது, உரிய காலத்தில் துணைவேந்தர்களை நியமிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களால், தமிழக அரசுக்கு நல்ல பெயர் வந்து சேரவிடாமல், எதிர்க்கட்சி உறுப்பினரை போல கவர்னர் செயல்படுகிறார் என அவர் கூறினார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் மற்றும் திரளான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.