திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்கின்றனர்.
அண்ணாமலையார் மீதும் திருவண்ணாமலையில் வாழ்ந்த மகா சித்தர்கள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஸ்ரீ ரமண மகரிஷி மீது உள்ள பற்றின் காரணமாகவும்,. தமிழ் மீது பற்றுக் கொண்டும் பல்வேறு நாடுகளில் இன்றும் வெளிநாட்டவர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா நாட்டை சேர்ந்த யோகா ஆசிரியை ஹனா தலைமையில் 25 அமெரிக்கா ஆன்மீக பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்த அவர்கள் தமிழ் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்தனர்.
முன்னதாக திருக்கோவில் பெரிய நந்தி அருகில் குழுவாக அமர்ந்து நமச்சிவாய பாடலை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர் . தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்திற்கு உள்ளே சென்று அங்குள்ள ஆயிரம் தூண்களையும் தூண்களில் உள்ள சிற்பங்களையும் ஆச்சரியத்துடன் கண்டு வியந்து அந்த சிற்பங்கள் குறித்த விவரமாக கேட்டறிந்தனர்.
தொடர்ந்து பாதாள லிங்கத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்த அவர்கள் வரிசையில் நின்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து பின்னர் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.
கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், ஸ்ரீ ரமணாஸ்ரமம் உள்ளிட்ட ஆசிரமங்கள் மற்றும் அஷ்ட லிங்கங்களையும் வணங்கி கிரிவலம் சென்றனர்.
கோயில் சார்பாக கோயில் அர்ச்சகர்கள் அவர்களுக்கு கோயில் வரலாறு குறித்தும் திருவண்ணாமலை கிரிவல சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
அமெரிக்க ஆன்மீக பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை பாடியதுடன் ஆசிரமங்களில் அமர்ந்து தியானம் மேற்கொண்டதும் திருக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ததும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.