திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவா், புதிய குடும்ப அட்டை கோரி இணையத்தில் பதிவு செய்திருந்தாா்.
இதுகுறித்து அவா் வட்ட வழங்கல் அலுவலா் சுமதியிடம் தகவல் தெரிவித்தபோது, புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமானால் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் என்று சுமதி கூறினாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருண்குமார் இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகனிடம் தகவல் தெரிவித்தாா்.
இந்நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை அருண்குமாா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சுமதியிடம் வழங்கினாா்.
அப்போது மறைந்திருந்த உதவி ஆய்வாளர் மதன்குமார் தலைமை காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் சுமதி கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வட்ட வழங்கல் அலுவலர் சுமதி வருகின்ற 31-ஆம் தேதி பணி நிறைவு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.