தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிலே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மில்கி ராஜா சிங், மாவட்ட செயலாளர் மணி சேகர், ஆகியோர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பணியாளர்கள் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது,
இதில் வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், உதவி செயற்பொறியாளர் நிலை பதவி உயர்வினை மேலும் காலதாமதமின்றி வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்,
வளர்ச்சித்துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை முற்றிலும் கைவிட வேண்டும், கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைளை ரத்து செய்து, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும்
உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில, மாவட்ட, வட்டார அளவில் ஏற்படுத்த வேண்டும் என உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேருந்து நிலையத்தில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.