திருவண்ணாமலை அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல செயலையும் தை மாதத்தில் தொடங்குவது மரபு. ஆடி மாதத்தில் விதைத்த நெல் தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இதனை அறுவடை மாதம் என்றும் கூறுவார்கள். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த மாதத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், செங்கம் மற்றும் பள்ளிப்பட்டு , வந்தவாசி அருகே உள்ள காவேரிப்பாக்கம் பகுதிகளில் பானை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் சுமார் 900 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
மண்பாண்டம் தயார் செய்வதற்கு களிமண் வெளியூரில் இருந்து டெம்போ, டாட்டா ஏசி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து களிமண் கொண்டு வருவதால் ஒரு லோடு ₹7000க்கு வாங்கி வந்து மண்பாண்டங்கள் செய்து வருகிறார்கள்.
இதனால், பொங்கல் வைக்கும் பானை ₹100 முதல் 150 வரையும், மண் சட்டி ₹50, அடுப்பு ₹200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பானைகள், அடுப்புகள் உள்ளிட்டவை மிகவும் தரமானதாக உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் நேரடியாக வந்திருந்து பானைகளை வாங்கி செல்கின்றனர்.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அதாவது கார்த்திகை தீப திருவிழாவின் போது அகல் விளக்கும், பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானையும் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருவதாக கூறி வருகின்றனர்.
மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்
மண்பாண்டங்களை பயன்படுத்தி அதில் சமைத்து உண்பதன் மூலம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத் தன்மை உருவாகிறது. நமது பாரம்பரிய தொழிலாக இருந்து வந்த இந்த மண்பாண்ட தொழில் கடந்த 20 ஆண்டுகளில் நசிந்து வருகிறது.
சில்வர் மற்றும் அலுமினியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள் எளிதில் கிடைப்பதாக நினைத்து அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மண்பானை செய்து, அதனை சூளையில் வைத்து சுடுவதற்கு மூல மூலப் பொருட்களான வைக்கோல், வராட்டி, தென்னை மட்டை போன்ற பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே மண்பாண்ட தொழிலாளர்களிடம் மண்பானை, அடுப்பு, சட்டி உள்ளிட்ட பொருட்களை உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து அதனை அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் மூலமும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கடும் பனிப்பொழிவு பெய்து வருவதால் தயார் செய்த பானைகளை சூளைகளில் சூடு ஏற்ற முடியாமல் தவித்து வருகிறோம், எனவே எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வைத்தால் தமிழகம் முழுவதும் இந்த தொழிலை நம்பி உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.