கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.
வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.
14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.
பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத பவுர்ணமி ஜனவரி 13 ஆம் தேதி திங்கள் கிழமை அதிகாலை 4.50 மணியளவில் துவங்கி, ஜனவரி 14ஆம் தேதி அதிகாலை 4.07 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.