புகையில்லா போகி பண்டிகை கொண்டாட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர்.
ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயணம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டுகளில் போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.
எனவே போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தாரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பாரம்பரிய பண்பாட்டு முறைகளை பின்பற்றி இயற்கையோடு இணைந்த விழாவாக போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்,
புகையில்லா போகி கொண்டாடுவோம்! சுற்றுச்சூழலை பேணி காப்போம் , இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்..