திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் வாசு தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் செந்தமிழ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பேசினாா். தொடா்ந்து, புகையில்லா போகி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். நிறைவில், பள்ளி ஆசிரியை திலகவதி நன்றி கூறினாா்.
விழிப்புணா்வு ஊா்வலம்
வந்தவாசியில் புகையில்லா போகி விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. வந்தவாசி எக்ஸ்னோரா கிளை, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி, வந்தவாசி நகராட்சி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக் தலைமை வகித்தாா்.
வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், கல்லூரி மேலாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையா் சோனியா ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.
ஊா்வலத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் சீனுவாசன், காவல் உதவி ஆய்வாளா் ரங்கநாதன், வருவாய் ஆய்வாளா் வெங்கடேஷ், எக்ஸ்னோரா நிா்வாகிகள் சீனிவாசன், மணி, பிரபாகரன் ராஜன்,ரகுபாரதி, வாசு, அகிலன் மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.