திருவண்ணாமலையில் உள்ளக நன்மைக்காகவும் அக்னி தெய்வமான அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக திருவண்ணாமலையில் முதல் முறையாக கிரி ஆரத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் , நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
இந்த மண் சரிவில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் மலை மீது பல்வேறு இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அக்னி தெய்வமாக இருக்கும் அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் ,மேலும் உலக நன்மைக்காகவும் கிரிவலப் பாதை சந்தை மேடு பகுதியில் கிரி ஆரத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த ஆரத்தி பூஜைகள் காசி கங்கை நதியில் நடைபெறுவது வழக்கம்.
திருவண்ணாமலையில் முதல் முறையாக 7 சிவனடியார்களை கொண்டு கிரி ஆரத்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அக்னி தெய்வமாகவும் ஜோதி பிழம்பாய் காட்சி தரும் அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக 7 சிவனடியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து மலர்களை தூவி ஊதுவத்திகளை காண்பித்தும் பின்னர் இரண்டரை அடி உயரம் கொண்ட சர விளக்குகளை கொண்டு பிரம்மாண்ட தீபம் ஏற்றி கிரி ஆரத்தி தீபாரதனையை மலையை நோக்கி காட்டினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
இந்நிகழ்வில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் தலைவர் ராமானந்தா, ஆதிசைவ ஆச்சாரிய பீடம் பீடாதிபதி சிவராஜ ஆச்சாரியார், கும்பகோணம் மவுனசாமி மடம் ஆனந்த ஞானிஸ்வரி தீர்த்த சுவாமிகள், சிவசக்தி சுருளி அம்மாள் பீடம் அருணை மாதாஜி , ஓம் ஸ்ரீ கந்தவேல் ஜோதி மகாசபை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் வடபழனி கமல், சேலம் கோபால் சித்தர் பீடம் ஜெயராஜ் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.