திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது.
அதே போன்று மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜைகள் மற்றும் மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் மதியம் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் விஷேசமானது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை ஆயிரங் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைத் தொடர்ந்து திருமஞ்சன கோபுர வீதி வழியாக வந்து, மாட வீதியில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் பவனி வந்து அருள் பாலித்தார். அவர்களுடன், திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசகரும் வலம் வந்து காட்சி கொடுத்தார். அவர்களை வழியெங்கும் பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், ராஜகோபுரம் வழியாக சுவாமிகள் (உற்சவ மூர்த்திகள்) வந்து மாட வீதியில் வலம் வரும் நிலையில், நடராஜ பெருமான் மட்டும் திருமஞ்சன கோபுரம் வழியாக வலம் வருவது கூடுதல் சிறப்பாகும்.
அதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இன்று நடராஜருக்கு சாத்தப்பட்ட மகா தீப மை பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும். மகா தீபத்திற்கு நெய் காணிக்கை அளித்த பக்தர்களுக்கும் மகா தீப மை பிரசாதம் வழங்கப்படும். திருவண்ணாமலையில் இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.