திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக நேற்றும் அதிகளவில் பக்தர்கள் வந்தனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது.
அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
ஊழியர் மீது தாக்குதல்
இந்த நிலையில், அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவ்வாறு வரிசையில் வந்த சென்னை சேர்ந்த விக்னேஷ், பாலாஜி, ஹரிகரன், சூர்யா ஆகிய 4 பேர் அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகே வரும் பொழுது வரிசையில் இருந்து இரும்பு தடுப்பை தாண்டி வெளியே வந்து அம்மன் சன்னதிக்குள் குறுக்கு வழியாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அம்மன் சன்னதியில் பணியாற்றிய கோவில் ஊழியர் பாண்டியன் அவர்களை தடுத்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த அவர்கள், பாண்டியனை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், பாலாஜி, ஹரிகரன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
வாகனம் நிறுத்த இடம் தேவை
பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நெரிசல் நகரின் பல பகுதிகளில் காணப்பட்டது. மாட வீதி, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கார், வேன்கள் அனுமதிக்கப்படவில்லை.
பெரும்பாலான குறுக்கு சாலைகளில், வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் இடமில்லாததால் பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் மதில் சுவர் மாட வீதிகளில் உள்ள சாலை ஓரங்களிலும் வாகனத்தை நிறுத்தி சென்று விடுகின்றனர்.
பலர் தங்களது வாகனங்களை எங்கு நிறுத்துவது என தெரியாமல் இடம் தேடி மாடவீதி ஒட்டி உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அங்கு குடியிருப்பவர்கள் வெளியில் வர முடியாமலும் தங்களது வாகனங்களை எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்தை சீரமைப்பது காவல்துறையினருக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,
சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகிறோம். வாகனங்களை நிறுத்த பார்க்கிங் மையம் இல்லாததால் இடம் தேடி அலைந்து சாலையோர பகுதிகளில் காரை நிறுத்தி சாமி தரிசனம் செய்கிறோம்.
இதனால் அங்கு இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகிறது. சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆகிறது என்றால் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் அதை விட கூடுதலாக ஆகிறது.
எனவே அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனத்தை நிறுத்த பார்க்கிங் ஸ்பாட் அமைத்து கொடுத்தல் மற்றும் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு என உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.