சாத்தனூா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்வார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சாத்தனூர் அணைக்கு அதிக அளவில் செல்வார்கள். 2 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாகும்.
இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்ததால் தற்போது நீர்மட்டம் அதிக அளவில் உள்ளது. இங்கு பெரிய அளவிலான பூங்கா உள்ளது. அதில் சிறுவர் சிறுமிகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்குமேடை, நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. முதலைப்பண்ணையும் இங்கு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருவண்ணாமலை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் சாத்தனூர் அணைக்கு நேற்று காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் தங்கள் வீட்டில் தயாரித்த பொங்கலை கொண்டு வந்து குடும்பத்துடனும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் பலர் அங்கேயே சமைத்து தங்களுடன் வந்தவர்களுக்கு விருந்து படைத்தனர்.
மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் ஊஞ்சல் ஆடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தில் பெரியர்களும் சேர்ந்து குளித்து மகிழ்ந்தனர். இதனையொட்டி படகு சவாரியும் நடந்தது. முதலை பண்ணையை பார்க்கவும் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். மேலும், சமூக விரோதிகள் குடித்து விட்டு சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்வதை தடுக்கும் வகையில் சாத்தனூர் அணைக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. காலை கூட்டம் மந்தமாக காணப்பட்டது. மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் சுற்றுலா வந்தனர்
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை பகுதியில் உள்ள பூங்காக்கள், அமிர்தி வன உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.