Close
ஜனவரி 22, 2025 3:35 மணி

பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர்..!

பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர்

திருவண்ணாமலை பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர் மண்டகப்படி விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை ஸ்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன. கோவில்களைக்கட்டும் போதே அருகில் குளம் ஒன்றை வெட்டும் பழக்கத்தை நமது மூதாதையர்கள் வைத்திருந்தனர்.

தொலை தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அந்த குளத்தில் குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வழிபாடு செய்ய உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கோவில் அருகிலேயே திருக்குளங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆலயங்கள் அருகில் மகிமை மிக்க தீர்த்தங்கள் இருப்பது நமது சாஸ்திரங்கள், புராணங்கள் மூலம் தெரிய வந்தது. முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் இந்த தீர்த்தங்களை உருவாக்கி, அதில் நீராடி, வழிபட்டு உரிய பலன்களைப் பெற்று இருப்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மலை மீதும் மற்றும் நகரைச் சுற்றி நாலாபுறமும் இந்த 360 தீர்த்தங்களும் இருந்தன. ஒரு நிமிடம் அந்த 360 தீர்த்தங்களும் திருவண்ணாமலையைச் சுற்றி அமைந்திருப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்…. எவ்வளவு பசுமையாக இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே பிரமாண்டமாக தோன்றுகிறது அல்லவா?

ஆனால் புராணங்களில், தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன. ஆக்கிரமிப்பில் இருந்து தப்பி சில தீர்த்தங்கள் மட்டும் இப்போதும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகின்றன.  சில தீர்த்தங்கள் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்வது போல இந்த தீர்த்தத்தை தினமும் காலையில் மனதில் நினைத்தாலே போதும் அந்த தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

பாண்டவர் தீர்த்தம், ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அக்னி தீர்த்தத்திற்கு பக்கத்தில் உள்ள அக்னி லிங்கம் செல்லும் பாதையில் அக்னி லிங்கத்திற்கு மேல் பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த பாண்டீஸ்வரர் கோயில். பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள பாண்டவர் தீர்த்தம் மிகவும் புனிதமானது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் திருவுடல் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின்போது சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதை எடுத்து அம்மனை மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அருணாச்சலேஸ்வரரை குமர கோயிலுக்கு கொண்டு சென்று அங்கு இரவு முழுவதும் தங்க வைக்கப்படுவார்.

திருவுடல் விழா முடிந்த பிறகு மறுநாள் கிரிவலம் செல்லும் போது பாண்டீஸ்வரர் கோயிலில் பாண்டவர் தீர்த்தத்தில் இருந்து அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். காலப்போக்கில் பாண்டவர் தீர்த்தம் மலை அடிவாரம் என்பதால் அந்தப் பாதை சுவாமி செல்ல ஏற்றவாறு இல்லாமல் போனது. பாண்டீஸ்வரர் கோயிலுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால்  சுவாமியின் பாதுகாப்பு கருதி குமர கோவிலில் அருணாச்சலேஸ்வரரை இறக்கி வந்ததாக சிவாச்சாரியார்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதியை சேர்ந்த 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் முயற்சியால் ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோயில் ரூபாய் 1 கோடியில் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வருவதற்கு ஏற்றார் போல் சிறப்பாக சாலைகள் அமைக்கப்பட்டதால் பழமையை போற்றி மீண்டும் அருணாச்சலேஸ்வரரை பாண்டவர் தீர்த்தம் பாண்டீஸ்வரர் கோயிலுக்கு எழுந்து அருள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் முயற்சியால் அருணாச்சலேஸ்வரர் கோயில்  அறங்காவலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு முதல் பாண்டீஸ்வரர் கோயிலுக்கு அருணாச்சலேஸ்வரர் எழுந்தருளினார்.

இந்நிலையில் நேற்று அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்ற போது  உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் பாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்

அங்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சிவாச்சாரியார் சங்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் மண்டகப்படி நடத்தினர்.

இந்த சிறப்பான நிகழ்வில் ரமணாஸ்ரமத்தின் தலைவர் ஆனந்தன், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் லாயர் சந்திரமோகன், அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர்கள் திருவண்ணாமலை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ஸ்ரீதேவி பழனி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிறகு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரம கிழக்கு வாசல் பகுதியில் (அக்னி லிங்க சாலை) பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை மாமன்ற உறுப்பினர் பிரகாஷ், அண்ணாமலையார் திருக்கோயில் சீர் பாதம் தூக்கி அண்ணாமலை மற்றும் அண்ணாமலையாரை சுமந்து வரும் சீர் பாத தூக்கிகள் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top