Close
ஜனவரி 22, 2025 6:16 மணி

பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா : அமைச்சா் பங்கேற்பு..!

பொங்கல் விழாவில் பேசிய அமைச்சர் வேலு

சே.கூடலூா் ஊராட்சியில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சே.கூடலூா் ஊராட்சியில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா்  பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பொங்கல் வைத்து விழாவை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பெரியாா் சமத்துவபுரத்தில் தை திருநாளாம், பொங்கல் திருநாளையொட்டி, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் எண்ணத்தில் உதித்த முத்தான திட்டம்தான் பெரியாா் சமத்துவபுரம் திட்டமாகும். தற்போது, முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான் இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

அனைத்துத் தரப்பு மக்களும் சமம் என்றும், சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இலவசமாக விதை வழங்குதல், மானியத்தில் உரம் வழங்குதல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் விவசாயத்தில் மேற்கொள்ளப்பட்டன.

விவசாயம் நலிந்து, பஞ்சம் ஏற்பட்டபோது விரைவாக நெல் அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, வேளாண் பல்கலைக்கழகம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ரகம் ஐ.ஆா்.8 என்ற நெல் ரகம். இந்த நெல் விதையை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி, மேலும் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பல்வேறு விவசாய திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் உணவுப் பஞ்சத்தை போக்கிய வரலாறு என்பது முன்னாள் முதல்வா் கருணாநிதியையே சேரும். அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மேலும் முதல்வர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விவசாயத்துறையின் அமைச்சர் அதன் செயலாளர் இயக்குனர் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் விவசாயிகளுக்கு என்ன திட்டங்கள் மற்றும் உதவிகள் மேற்கொண்டு வருகிறீர்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்ற ஆட்சியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த சே.கூடலூா் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவரின் பெரும் முயற்சியால் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் ஆறு லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் கூடம் 10 லட்சம் மதிப்பீட்டில் பன்னோக்கு கட்டிடம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 24 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர் சேர்க்க தொட்டி கட்டும் பணிகள் இந்த ஊராட்சியில் நடைபெற்றுகிறது.

இந்தப் பொங்கல் திருநாளில் சமத்துவ புரத்தில் உள்ள அனைவரும் வாழ்க்கையில் வீடு புகழும் மற்றும் நிலத்தை செல்வத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் சமத்துவ புரத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை அமைச்சர் தெரிவித்தார்.  தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்டத் துணைச் செயலாளர் பிரியா விஜய ரங்கன், அமைப்பு சாரா அமைப்பாளர் ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top