Close
ஜனவரி 22, 2025 4:03 மணி

தமிழக லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் தடை செய்ய கேரள கவர்னரிடம், நாமக்கல் எம்.பி., கோரிக்கை..!

திருவனந்தபுரத்தில், கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகரை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

நாமக்கல் :

கேரள மாநிலத்தில் தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் அம்மாநில கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் சார்பில், பார்லி. நிலைக்குழு கூட்டம், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு, கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரை மாதேஸ்வரன், எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:

நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டை ஏற்றிச் செல்லும் லாரிகளை, கேரள மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்குப் பதிவு செய்து தொல்லை செய்கின்றனர். இதை கைவிட வேண்டும். மேலும் கேரள மருத்துவக் கழிவுகளை தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தடை செய்ய வேண்டும்.

கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கும், தமிழக கேஸ் டேங்கர் லாரிகளுக்கு, போலீசார் ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். இதில் தவறு நடைபெறுகிறது. எனவே வாகனங்களை நேரில் பரிசோதனை செய்து தகுந்த ஆவணங்கள் இருந்தால் வழக்குப்பதிவு செய்யக்கூடாது. மேலும், அபராதம் விதிக்கும் போது, சம்பந்தப்பட்ட லாரி டிரைவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கேரள மாநிலத்தில் வசிக்கும், கொங்கு வேளாளர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கேரள கவர்னர் தெரிவித்துள்ளதாக, மாதேஸ்வரன் எம்.பி. கூறினார். நிகழ்ச்சியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜா, பரணிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top