Close
ஜனவரி 22, 2025 9:57 காலை

போதமலைக்கு ரூ. 139.65 கோடி மதிப்பில் புதிய மலைப்பாதை: கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் மாவட்ட போதமலைக்கு ரூ. 139.65 கோடி மதிப்பில், புதிய மலைப்பாதை அமைக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் :
நாமக்கல் மாவட்டம், போதமலைக்கு ரூ. 139.65 கோடி மதிப்பில், புதிய மலைப்பாதை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழூர் ஊராட்சியில், கிழக்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான போதமலை அமைந்துள்ளது. இந்த மலை முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய 3 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம பஞ்சாயத்தில் 1,727 பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்திய சுதந்திரம்அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த மலை கிராமத்திற்கு இதுவரை சரியான சாலை வசதி இல்லை.

இங்கு வாழும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கரடு முரடான பாறைகளுடன் கூடிய, ஆபத்தான மலைப்பாதையில் நடந்துதான் வர முடியும்.

மலைவாழ் மக்களின் துயர் துடைக்க, தமிழக முதல்வர் கடந்த 18.02.2024 அன்று, நபார்டு திட்டத்தின்கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ. 139.65 கோடி மதிப்பீட்டில், 31 கி.மீ. தூரத்திற்கு புதிய மலைப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து, பணிகளை துவக்கி வைத்தார்.

தற்போது புதிய ரோடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப்பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, அங்கு வசிக்கும் பொதுமக்களின் விபரம், சாலைப் பணிகள் விபரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் ரோட்டை தரமான முறையில் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கான்ட்ராக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பிடிஓ வனிதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top