அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்ற சர்வதேச 10ஆவது பலூன் திருவிழா நடைபெற்றது.
இதில், அதிகமான காற்றழுத்தம் காரணமாக காற்றின் சுழற்சி அதிகரித்ததின் விளைவாக பலூன் பறக்க விடுவதில் தாமதம் ஏற்பட்டது.இதன் காரணமாக ராட்சத பலூன்கள் சிறிது தூரம் மட்டுமே பறக்கவிட்டு நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக மதுரை மட்டுமன்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆர்வமாக வந்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், ஏறுதழுவுதல் அரங்கம் முழுவதும் பார்வையாளர்களை கவரும் விதமான வகையில் ராட்டினம், மின்னொளி விளக்குகள், உள்ளிட்ட கண்கவர் விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆகியோர் அரங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வெளிமாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழும் வகையில் கலை நிகழ்ச்சி அமைந்திருந்தது.