திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 155 வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 155 வது ஜெயந்தி விழா திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் 1870-ல் பிறந்தார். பிறகு தை மாதம் 1889 முதல் திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பல அற்புதங்களை திருவண்ணாமலையில் நடத்திக் காட்டினார். மார்கழி மாதம் 1929- ல் ஜீவசமாதி அடைந்தார். திருவண்ணாமலை பகவான் ஸ்ரீ ரமணர், வள்ளிமலை சுவாமிகள், காஞ்சி மகா பெரியவர், உட்பட அனைவரும் குருவாக ஏற்ற மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் மலைக்குத் தென்புறம் செல்லும் கிரிவலப் பாதைக்கு செங்கம் சாலை என்று பெயர். அச்சாலையின் கிழக்குப் பாகத்தில் சாலைக்கு வடப்புறம் ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமம் அமைந்துள்ளது. அவ்வாஸ்ரமத்துள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் சமாதிக் கோவில் அமைந்துள்ளது.இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தன்று ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அவதரித்த அஸ்த நட்சத்திர தினமான நேற்று, அதிகாலை 4 மணி அளவில் கோ பூஜைகள் நடைபெற்ற பின்பு மகானுக்கு சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தேவார இன்னிசை நிகழ்ச்சி , வேத பாராயணங்கள் நடைபெற்றது.
உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் நடைபெற்று மதியம் 12 மணி அளவில் பூர்ணாகுதி நடைபெற்றது. மகேஸ்வர பூஜை செய்து சாதுக்களுக்கு வஸ்திர தானம் ,அன்னதானம் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை இன்னிசை நிகழ்ச்சிகள், நடைபெற்றன. ஆசிரமம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான ஒரு கண்டு ரசித்தனர்.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.