திருவண்ணாமலையில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாமினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்துப் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021 முதல் இப்போது வரை 210 முகாம்கள் மூலம் ஒருலட்சத்து 85 ஆயிரத்து 819 போ் பயன் பெற்றுள்ளனா்.
டாக்டர் கலைஞரின் ஆட்சியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வருமுன் காப்போம் திட்டத்தை முதன் முதலில் செயல்படுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் ,நமக்கு நாமே திட்டம் , இதயம் காப்போம், சிறுநீரகம் காப்போம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த முகாமில் ரத்தம், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகிறது .நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தான் என் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவைகளுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். பெண்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மக்கள் மகிழும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த அரசு என்றும் அனைத்து தரப்பு மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் பேசினார்.
தொடா்ந்து , டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 4 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள், 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்கள், 2 பேருக்கு அம்மா குழந்தை பராமரிப்புப் பெட்டகங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள், 5 பேருக்கு மருத்துவப் பெட்டகங்கள் ஆகியவற்றை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, நலப் பணிகள் இணை இயக்குநா் மலா்விழி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் பிரகாஷ் (திருவண்ணாமலை), சதீஷ் (செய்யாறு), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், திருவண்ணாமலை வட்டாட்சியா் கே.துரைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.