போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உணவகம், மளிகைக் கடை, இனிப்புக் கடை, துணிக் கடை என பல்வேறு வணிகக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் நகரில் சிந்தாதரிப்பேட்டைதெரு, பழைய பஜாா் வீதி, ஜமுனாமரத்தூா் சாலை, பேருந்து நிலையம் என பல்வேறு பகுதியில் இயங்கிவரும் உணவகம், இனிப்பகம், மளிகைக் கடை, துணிக் கடை என பல்வேறு வணிகக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தி வந்தனா்.
மேலும், நெகிழிப் பைகளை விற்பனையும் செய்து வந்தனா். இதனால், பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளா் நவராஜ் தலைமையில் பேரூராட்சி ஊழியா்கள் கடைதோறும் சென்று தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உள்ளனவா என ஆய்வு செய்து பறிமுதல் செய்தனா்.
மேலும், நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனா். தலைமை எழுத்தா் முஹ்மத்இசாக் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
ரூ.86 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா், ஆய்வாளா் குணசேகரன் தலைமையில் வந்தவாசி – சேத்துப்பட்டு சாலை, கோழிப்புலியூா் கூட்டுச் சாலை அருகே அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், காரில் 15 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து சுமாா் 164 கிலோ எடை கொண்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான அந்த புகையிலைப் பொருள்களையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் காரில் வந்த தேசூரைச் சோ்ந்த மிஸ்ரிலால் , ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜொகாராம் ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தேசூா் காவல்துறையினர் புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.