Close
ஜனவரி 24, 2025 8:23 காலை

உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் : ஆட்சியர் கள ஆய்வு..!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொண்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ,மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் தேவைகளை தீர்க்கும் வகையில் அரசின் அனைத்து சேவைகளும் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்க்கும் வகையில் அரசின் சார்பில்  செயல்பட்டு வருகிறது.

மேலும் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாதத்திற்கு ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கள ஆய்வு மேற்கொண்டு அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பவித்திரம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் நாய் கடி, பாம்பு கடி உள்ளிட்ட விஷப்பூச்சி கடிகளுக்கான மருந்து இருப்பு குறித்தும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தொடக்கப்பள்ளியில் புதியதாக 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் துரிதமாகவும் விரைந்து முடிக்க துரை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தி. வாளா வெட்டி ஊராட்சியில் பள்ளியின் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் வருகை விபரம் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து வெறையூர் ஊராட்சியில் உள்ள வருவாய் அலுவலர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டும், வெறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் கூட்டுறவு கடையில் ஆய்வு மேற்கொண்டு நியாய விலைக் கடைகளில் இருப்பு விவரங்களை கேட்டு அறிந்தும், எடை அளவு குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருவண்ணாமலை வட்டம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top