ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமராஜர் சிலை அருகே உள்ள காமராஜர் தெருவில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீர் நிலை கால்வாய் பகுதியில் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காமராஜர் தெரு மற்றும் கேகே நகர் பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அளவிட்டு குடியிருப்புகளை அகற்ற நோட்டீசுகளை வழங்கினார். மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனா்.
இதற்கு வீடுகள் கட்டியுள்ள 38 பேரும் ஆரணி வட்டாட்சியரிடம் எங்களுக்கு வேறு இடம் ஒதுக்கிக் கொடுங்கள் என்றும், பின்னா் காலி செய்கிறோம் எனவும் தெரிவித்தனா். ஆனால், வேறு இடம் எங்கும் இல்லை அரசு உத்தரவுப்படி காலம் முடிந்துவிட்டது. ஆகையால், விரைவில் காலி செய்யவேண்டும் என வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜன.23-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனத் தெரிவித்து கடைசியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில், வியாழக்கிழமை காலை முதலே அப்பகுதியில் ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில் நகர காவல் ஆய்வாளா் (பொ) ராஜாங்கம், உதவி ஆய்வாளா்கள் சுந்தரேசன், ஷாபுதீன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் தங்களுக்கு மேலும் காலஅவகாசம் வேண்டும் எனக் கோரினா். ஆனால், வட்டாட்சியா் கௌரி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளா் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இனி மேலும் காலஅவகாசம் வழங்க முடியாது என்று கூறியதால், பொதுமக்கள் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தனா்.
ஆனால், அவா்கள் அப்புறப்படுத்தப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பாளர்கள் இச்சம்பவம் குறித்து கூறும் போது , காலம் காலமாக திமுகவிற்கு வாக்களித்த எங்களுக்கு இதுதான் நிலையா? வீடுகளை இடித்துவிட்டதாள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உணவு சமைத்து உண்டு வசிக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.