நாமக்கல் :
தும்மங்குறிச்சியில் உழவர் சந்தையின் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாமக்கல் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சியில், விவசாயிகளுக்கான உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஈஸ்வரி நடேசன் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நாமக்கல் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி தஙகமணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்வதால் ஏற்படும் பயன்கள், புதிய அடையாள பெறுவதற்கான வழிமுறைகள், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உழவர் சந்தையில் காய்கறி விலை நிர்ணயம் குறித்து விளக்கி கூறினார். இன்னொரு உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், உழவர் சந்தைக்கான இலவச பஸ் வசதி, காய்கறி விற்பனைக்கான கடை ஒதுக்கீடு, அதிகாலையில் காய்கறி விலை நிர்ணயம் ஆகியன குறித்து பேசினார். திரளான விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் விவசாயி மணிகண்டன் நன்றி கூறினார்.