நாமக்கல் :
மோகனூர் அருகே, மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 60 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை திருட்டுப்போனது.
மோகனூர் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (42). அவர், நெய்க்காரன்பட்டியில் மளிகை கடை, மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். அவர், தினமும் அதிகாலை முதல் இரவு 9 மணி வரை கடை நடத்தி, வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை, 6:00 மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கள்ளாவில் இருந்த ரூ. 60,000 ரொக்கம், ஒரு பவுன் தங்க மோதிரம் ஆகியவவை திருட்டுப் போனது தெரியவந்தது.
இது குறித்து அவர் மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.