Close
ஜனவரி 31, 2025 5:58 காலை

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதலில் சொன்னவர் பெரியார்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதல் முதலில் சொன்னவர் பெரியார் தான் என காஞ்சிபுரம் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில்  நீர்வளத்துறை அமைச்சரும், திமுக கழக பொதுச் செயலாளருமான துரைமுருகன் பேசினார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ வுமான க.சுந்தர் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி தமிழ்ச்செல்வன் வரவேற்றார். இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சரும்,திமுக கழக பொதுச் செயலாளருமான துரைமுருகன் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு கலைஞர் பதக்கம் வழங்கி பேசியதாவது ,

ஹிந்தியை எதிர்த்து தொடர்ந்து எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திமுகவாகத்தான் இருக்கும். எத்தனையோ போராட்டங்கள்,எத்தனையோ உயிரிழப்புகள்,பலமுறை சிறை சென்றது என பல இடையூறுகளை கடந்தும் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தியை எதிர்த்துக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக.

உலகிலேயே தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக,மொழிக்காக எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிறது திமுக. பல சித்ரவதைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் திமுக தமிழ் மொழியை காப்பதை உயிர்க்கொள்கையாக வைத்திருக்கிறது.

ஹிந்தி வந்து விட்டால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று முதல் முதலில் சொன்னவர் பெரியார் தான் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
ராஜகோபாலாச்சாரியார் ஹிந்தியை திணிக்க முற்பட்ட போது வலுவாக திமுக எதிர்த்து போராடியது. பின்னர் அவரே தவறை உணர்ந்து திமுகவோடு இணைந்து ஹிந்தியை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார்.

மக்களவையில் ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்கள் கூட ஹிந்தியைத் தான் பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுவதில்லை.பிரதமர் மோடி தான் ஹிந்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார். மக்களவையில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட ஹிந்தி பேசுவதற்கு காரணமும் மோடி தான் காரணம்.

திமுக என்ற இயக்கம் இல்லையேல் தமிழகத்தில் ஹிந்தி தலைதூக்கி இருக்கும். தமிழகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும்,தீண்டாமையும் ஒழிக்க தெருத்தெருவாக சென்று குரல் கொடுத்த சீர்திருத்தவாதி பெரியார்.

ஆனால் இன்று அவரை பலரும் தரக்குறைவாக பேசுவது கவலையளிக்கிறது. ஹிந்தி எதிர்ப்பு என்பது திமுக காரர்களின் உடலில் ஊறியிருக்கும் உணர்வு என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top