Close
ஜனவரி 29, 2025 6:10 காலை

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக நேற்றும் அதிகளவில் பக்தர்கள் வந்தனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது.

நேற்று அதிகாலை கோயிலில் நடை திறக்கும் போதே, தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. காலை 8 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பொது தரிசன வரிசை மற்றும் 50 கட்டண தரிசன வரிசையில், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

வழக்கம் போல சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. ராஜகோபுரம் அடுத்த திட்டி வாசல் வழியாக பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டது. 50 கட்டண தரிசனம் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது.

தரிசனம் முடிந்ததும் தெற்கு கோபுரம் வழியாக வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களின் வருகையால், திருவண்ணாமலை நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

மேலும், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் பலரும் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், நேற்று கிரிவல பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருந்தது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நெரிசல் நகரின் பல பகுதிகளில் காணப்பட்டது. மாட வீதி, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கார், வேன்கள் அனுமதிக்கப்படவில்லை.

பெரும்பாலான குறுக்கு சாலைகளில், வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,

சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகிறோம். வாகனங்களை நிறுத்த பார்க்கிங் மையம் இல்லாததால் இடம் தேடி அலைந்து சாலையோர பகுதிகளில் காரை நிறுத்தி சாமி தரிசனம் செய்கிறோம்.

இதனால் அங்கு இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகிறது. சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆகிறது என்றால் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் அதை விட கூடுதலாக ஆகிறது.

எனவே அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனத்தை நிறுத்த பார்க்கிங் ஸ்பாட் அமைத்து கொடுத்தல் மற்றும் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு என உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top