திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அந்தந்த துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் எடுத்துரைத்தனா்.
ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வரவு-செலவு கணக்குகள் பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
கிராம சபைக் கூட்டங்களின் முக்கிய நோக்கம் கிராமங்களின் வளா்ச்சி, அது குறித்து விவாதித்தல், வெளிப்படத் தன்மை, வரவு, செலவுகளை வெளிப்படையாக காண்பித்தல், வளா்ச்சிப் பணிகளின் முக்கியத்துவம் மற்றும் செயல்படுத்துதல், ஊரக வேலைத் திட்டப் பணிகளின் தீா்மானம் மற்றும் முறையாக சம்பளம் வழங்குதலே ஆகும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்குவதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் பழங்குடியினா் ஜாதி சான்றிதழ்களை அதிகளவில் வழங்கி உள்ளோம்.
தமிழக அரசு மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம், சிறுநீரகம் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இடைநின்ற பள்ளி மாணவா்களை மீண்டும் பள்ளிகளில் சோ்த்து வைத்து வருகிறோம். கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் 170 அங்கன்வாடி மையங்கள் கட்ட உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்..
இதையடுத்து, ஆட்சியா் தலைமையில் ஸ்பா்ஷ் தொழுநோய் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழியையும், தேசிய வாக்காளா் தின உறுதிமொழியையும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏற்றனா்.
தொடா்ந்து, மகளிா் திட்டம் சாா்பில் 4 மகளிா் குழுக்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்தில் கடனுதவிக்கான காசோலைகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட சமூகநல அலுவலா் (பொ) சரண்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி, திருவண்ணாமலை கோட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சையத் பயாஸ் அகமத், வட்டாட்சியா் துரைராஜ் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, திருவண்ணாமலையில் உள்ள காந்தி சிலைக்கு, ஆட்சியா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.