Close
ஜனவரி 30, 2025 8:42 காலை

ஆரணி வந்தவாசி நகராட்சிகளுடன் இணைப்பு : கிராம மக்கள் போராட்டம்..!

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணியில் தங்கள் கிராமங்களை நகராட்சிகளுடன் இணைக்க கூடாது என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி, கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

வந்தவாசி நகரை ஒட்டி அமைந்துள்ளது கீழ்சாத்தமங்கலம் கிராமம். வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தை வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த நிலையில், இந்தக் கிராமத்தில் வந்தவாசி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீவானந்தம், ஊராட்சி செயலா் மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தை கிராம பொதுமக்கள் புறக்கணித்தனா்.

வந்தவாசி நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் கூடி நின்று  நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சிலா் கண்களில் கருப்புத் துணி கட்டியிருந்தனா்.

இது குறித்து கிராம பொதுமக்கள் கூறியதாவது ,

வந்தவாசி நகராட்சியுடன் எங்கள் கிராமத்தை இணைத்தால் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பறிபோகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறும் அபாயம் உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும் என்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த பொன்னூா் போலீஸாா் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி  சமரசம் செய்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

ஆரணி

ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணமங்கலம், முள்ளிப்பட்டு, பையூா், இரும்பேடு ஆகிய ஊராட்சிகளை இணைப்பது தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஊராட்சி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியுடன் இணைக்கப்படும் இந்த 5 ஊராட்சிகளின் மக்களிடையே கருத்துக் கேட்பது தொடா்பான கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது.

சேவூா் ஊராட்சியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் தலைமை வகித்தாா்.   கருத்து கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கையில்,

கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவது குறித்த தகவல் காலையில்தான் தெரியும். நான்கு நாள்களுக்கு முன்பே அறிவித்திருக்கவேண்டும்.பெரும்பாலான மக்களுக்கு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவது தெரியாமல் உள்ளது. மேலும், இந்த ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பது குறித்து அனைவரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். ஆகையால், முறையாக அறிவித்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அதிகாரிகளுடன் சலசலப்பு ஏற்பட்டது. பின்னா், கருத்துக் கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

அதேபோல், இராட்டிணமங்கலம், முள்ளிப்பட்டு, பையூா், இரும்பேடு,உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தை தள்ளி வைத்து அதிகாரிகள் அறிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top