கேரள அரசியல்வாதிகளின் தரம் தாழ்ந்த செயலுக்கு பெரியாறு அணை பிரச்னை மிக, மிக முக்கியம். கேரள அரசியல்வாதிகளுக்கு நாட்டின் நலன், மக்களின் நலன் எல்லாம் பற்றி அக்கறை கிடையாது. அவர்களின் வஞ்சனை, சூது, சூழ்ச்சிகளை எல்லாம் தங்களை வளர்த்துக் கொள்ளும் சுயநலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் கையாண்டு வரும் விஷயம் தான், பெரியாறு அணை பலகீனமாகி விட்டது என்ற பொய்.
இந்த பொய்யை சொல்லி கேரளா நீலிக்கண்ணீர் வடிக்கவும், மனம் இளகிய தமிழக தலைவர்கள் சரி நாங்கள் பலப்படுத்துகிறோம் என ஒப்பந்தம் போட்டனர். இங்கு தான் தொடங்கியது சிக்கல்.
பலப்படுத்துகிறோம் என்றால், பலகீனமாக உள்ளது என்று தானே பொருள் என புயலாக புறப்பட்டு விட்டார்கள். தமிழக அரசியல் தலைவர்களின் இளகிய மனதை அவர்களுக்கு எதிரான ஆயுதமாகவே மாற்றி விட்டார்கள்.
இருப்பினும் தமிழக அரசியல் தலைவர்கள் மனம் தளரவில்லை. அடுத்தடுத்து தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளின் தலைவர்கள் அத்தனை பேரும், கேரள அரசியல்வாதிகளை போல் நாடகம் ஆடாமல் முறையாக சட்ட வரைமுறைகளை பின்பற்றினார்கள்.
ஒரு கட்டத்தில் அதாவது டெல்லியில் கேரள அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், கேரளா பெரியாறு அணையின் பல அடிப்படை உரிமைகளை தமிழகத்திடம் இருந்து பறித்துக் கொண்டது.
இருப்பினும் சரியான காலம் வரும் வரை தமிழக அரசியல் தலைவர்கள் காத்திருந்தனர். சட்டத்தின் ஆட்சியை நம்பினர். அதில் பெரும் வெற்றியும் பெற்றனர்.
உச்சநீதிமன்றம் ஒருமுறை அல்ல… இருமுறை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. பேபி அணையினை பலப்படுத்தி முடித்ததும் அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அறிவித்தது.
இந்த தீர்ப்பினை கேட்ட கேரள அரசியல்வாதிகளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. அவர்கள் தான் சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள். மனச்சாட்சியும் அற்ற சுயநலவாதிகளாயிற்றே. தங்களது கைக்கூலிகளை பயன்படுத்தி, வெளிநாட்டில் வசிக்கும் கேரள மக்களிடம் நீலிக்கண்ணீர் வடித்து பெரும் அளவி்ல் நிதி திரட்டி, கேரள கூலிகளுக்கு கொடுத்து கடந்த 20 ஆண்டுகளாக நீலிக்கண்ணீரை நிறுத்தாமல் வடிக்கின்றனர்.
இந்த நிலையில் மேலும் ஒருமுறை பெரியாறு அணை பற்றி விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த ஜோ ஜோசப் என்பவரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘‘இன்னுமா பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தவில்லை. பேபி அணைப்பலப்படுத்தும் பணிகளை முடிக்கவி்ல்லை. முதலில் நாங்கள் சொன்னதை செய்து முடியுங்கள்’’என காட்டத்தை வெளிப்படுத்தியது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ்ராய் ஒரு படி மேலே சென்று, ‘நான் கேரளாவில் வசித்தவன். எனக்கு கேரளாவை பற்றியும், கேரள மக்களைப்பற்றியும், முல்லைப்பெரியாறு அணையினை பற்றியும் நன்று தெரியும். பெரியாறு அணை எவ்வளவோ பருவநிலைகளை கடந்தும் மிகவும் வலுவாக உள்ளது. அணையினை பற்றி கேரள மக்கள் அச்சம் கொள்வதாக யாரும் கதை சொல்ல வேண்டாம். காமிக்ஸ் கதைகளை கேட்க நாங்கள் இங்கு நீதிபதிகளாக அமரவில்லை. நாங்கள் சொன்னதை செய்யுங்கள்’ என கேரளாவை விளாசித்தள்ளி விட்டார்.
பெரியாறு அணையில் கேரள அரசியல்வாதிகள், கேரள யூடியூபர்கள், கேரள விஷம பத்திரிக்கையாளர்களை எதிர் கொண்டு, தன் வாழ்நாளையே பெரியாறு அணைக்காக அர்ப்பணித்து வாழும் சில விவசாயிகள் மற்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு இந்த விஷயம் பால் வார்த்தது போல் உள்ளது.
நீதி கேட்டு டெல்லி செல்லக்கூட பணம் இன்றி தவிக்கும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு பெரியாறு அணைக்கு எதிராக பரப்பப்படும் தவறான கருத்துக்களை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என நீதிபதிகளிடம் முறையிட திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால் இதற்கு ஆகும் மிகப்பெரிய செலவினை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். கேரள கைக்கூலிகளுக்கு கொட்டுவது போல் பணமழை பெரியாறு பாசன விவசாய சங்க நிர்வாகிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. போராட்டத்திலேயே வாழ்வை கழிக்கும் அவர்கள் சில அல்லது பல உணவு வேளைகளை பட்டினியுடன் தான் இன்னும் கடந்து கொண்டிருக்கின்றனர் என்ற வேதனை நெருங்கிப்பழகிய தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும்.
குறிப்பாக மாதம் பல முறை போராட்டம் நடத்தும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் போராட்ட நாட்களில் பெரும்பாலும் பட்டினி தான். அதிகபட்சம் டீ குடிப்பார்கள். சில நேரங்களில் டீ கூட கிடையாது.
இருப்பினும் அவர்களின் போராட்ட குணம் மாறாதது இறைவன் அவர்களுக்கு வழங்கிய வரம். அப்படி வறுமை மிரட்டினாலும், உள்ளத்தின் உரத்தினை வைத்து, துணிவோடு கேரள விஷமிகளை எதிர்கொண்டு வரும் பெரியாறு வைகை பாசன சங்க விவசாயிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் இந்த வார்த்தைகள், ‘மிகப்பெரிய வாழ்வியல் நம்பிக்கையினை கொடுத்துள்ளது’.
அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியினை மீண்டும் பென்னிகுயிக் பிறந்து வந்துள்ளார் என்றே போற்றி வருகின்றனர். சூழ்நிலை எப்படியிருந்தாலும், எந்த விஷமிகள் எவ்வளவு சூழ்ச்சிகளை செய்தாலும், இந்த பிரபஞ்சம் எப்போதும் ஒரு விஷயத்தை மிகச்சரியாகவே கையாளும் என்பது பெரியாறு அணை விஷயத்திலும் மிகச்சரியாக பொருந்தி உள்ளது.