உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை, தை அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கும் வரும் நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்கள் தை அமாவாசை நாளில், மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது.
மிகவும் புனித நாளமாக கருதப்படும் தை அமாவாசை நாளில் தான் ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமநாத சுவாமியே அம்பாளுடன் அக்னி தீர்த்தத்திற்கு எழுந்தருளி புனித நீராடுவார் என்றால் இது எவ்வளவு சிறப்பான நாள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் புனித நீராடினால் கர்மாக்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம். தை அமாவாசையை முன்னிட்டு புண்ணிய ஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம்.
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. அமாவாசை நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று அவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது . இந்த நாட்களில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுளுடன் புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் ,
இந்நிலையில் திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும் கிரிவலப்பாதையில் உள்ள புனித தீர்த்த குளம், தென்பெண்ணை ஆறு, செய்யாற்று, கலசப்பாக்கம் நந்தன் ஏரி உள்ளிட்ட இடங்களில் கூடிய பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தை அமாவாசையை யொட்டி இன்று திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலையிலேயே அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த தை அமாவாசை நன்னாளில் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் கிரிவலம் வந்தனர்.