Close
ஜனவரி 30, 2025 5:24 மணி

மலை மீது ஆக்கிரமிப்புகள்: நீதிபதி முக்கிய ஆலோசனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும், மேலும் பல்வேறு தீர்த்த குளங்கள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது என்று யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன் தான்! அங்கு எப்படி கழிப்பிடங்களும் கட்டிடங்களும் கட்ட அனுமதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் படி தொடர்ந்து மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்த குழு ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், மீண்டும்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், நகராட்சி ஆணையா் காந்திராஜன், வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய நீதிபதி,  இதுவரை எத்தனை ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது, மேலும் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களின் ஆக்கிரமிப்பு எந்த அளவுக்கு உள்ளது, ஆக்கிரமிப்பாளர்கள் விபரங்கள், ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார், என்பது குறித்த விபரங்கள் கேட்டு அதிகாரிகளுடன் நீதிபதி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மலை மீது இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றம் இடம் கொடுப்பது சம்பந்தமாக நில நிர்வாக ஆணையாளரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி கோவிந்தராஜ் கேட்டறிந்தார்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கையை எப்படி எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்த அவா், அடுத்த கூட்டத்திற்குள் கூடுதல் தகவல்களை சேகரித்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top