Close
ஜனவரி 30, 2025 9:15 மணி

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்: அமைச்சர் பங்கேற்பு..!

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற, தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்:

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு மருதகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் கொங்கு வோளர் சமூகத்தின் பண்ணைகுலம் மற்றும் தூரன்குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரமாண்டமாக திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

கோயிலில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள 5 நிலை கொண்ட ராஜகோபுரம், முன்புறம் பிரம்மாண்டமான கொடிக்கம்பம், அழகியல கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுச்சுவர் மற்றும் ஆகம விதிமுறைப்படி கர்ப்பகிரகத்தின் மேல் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரம் போன்ற சிறப்பம்சங்களுடன் கும்பாபிசேக பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையொட்டி கும்பாபிசேக விழா கடந்த ஜன. 27ம் தேதி விநாயர் பூஜை, புண்யாஹவாசனம் மற்றும் தன பூஜையுடன்துவங்கியது. 28ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் லட்சுமி ஹோமம் நடைபெற்றது. 29ம் தேதி நவக்கிரஹ ஹோமம் நடைபெற்றது. நேற்று 30ம் தேதி காலை மோகனூர் காவிரி ஆற்றில் நீராடி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்களும், பெண்களும் தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு யானை, குதிரை, பசுவுடன் ஊர்வலமாக நாமக்கல் வந்தனர்.

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் புனித தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் நிகழ்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக நாமக்கல் பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, சேலம் ரோடு கார்னர், திருச்செங்கோடு ரோடு வழியாக சென்று பெரியூர் கோயிலை வந்தடைந்தனர்.

இன்று இரவு முதற்கால யாக சாலை பூஜை துவங்கி நடைபெறும். தொடர்ந்து 31ம் தேதி மற்றும் பிப். 1ம் தேதி 2 முதல் 5ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறும். 2ம் தேதி ஞயிற்றுக்கிழமை அதிகாலை 6ம் கால யாகசாலை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று, காலை 9.45 மணிக்கு புணித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுரங்களுக்கு ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பார்கள். பின்னர் மருதகாளியம்மனுக்கு மகா தீபாராதணை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னாதனம் வழங்கப்படும்.

திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் குழு உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பண்ணை குலம், தூரன் குலம் குடிப்பாட்டு மக்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top